Quantcast
Channel: Xossip
Viewing all articles
Browse latest Browse all 60709

Non-erotic - சிறுகதைகள்

$
0
0

1.செவபாக்கியம் ஆயா


மாட்டப் பிடிச்சுக் கட்றா மருவாதையா, பேச்சு என்ன வேண்டிக் கிடக்குப் பேச்சு... வந்தேன் பொடதிலயே மிதிப்பேன் பாத்துக்க..., ஏண்டி பொசகெட்ட சிறுக்கி ஏன் மசமசன்னு நிக்குற அரிசியப் பொடச்சமா கல்ல பொறுக்கிப்போட்டமான்னு இல்லாம என்ன கெனா கண்டுகிட்டு உக்காந்திருக்கா இடுப்புச் செத்துப் போனவளே பொக்குன்னு வேலையப் பாருடி வயலுக்குப் போனவைங்க வந்துருவாய்ங்க....சோத்தப் போடணும்...

ஆறடி உயரம் இருப்பாள் ஆயா. கண்டாங்கிச் சேலையும் தூக்கிச் செறுகின கொண்டயும், கையை வீசி நடக்கையில் காதில் திமிராய் ஆடும் தண்டட்டியுமாய் அவ்வளவு பெரிய வீட்டில் ஆளுமை செய்யும் சம்சாரி அவள். ஏழு ஆண் பிள்ளைகளோடு எட்டாவதாகப் பிறந்தவள். கட்டிக் கொடுத்தா ஒரு ஜமீந்தார் வீட்லதான் கொடுப்பேன்னு மீசையை முறுக்கி ஆயாவோடா அப்பா சொன்னதுக்கு காரணமே ஆயாதான். நான் ஆளப் பொறந்தவ அப்பே என்ன எவனாவது பொசகெட்ட பயகையில புடிச்சு கொடுத்துடாதீகன்னு ஆயா சொன்னதைத்தான் அந்த வீடே கேட்டு நடக்குமாம். சிறுவயசுலயே ஆத்தா இல்லாம வளர்ந்த புள்ளப்பு செவ்வாக்கியம் அவள பத்திரமா பாத்துக்கங்கன்னு சிவபாகியத்தை செவ்வாக்கியமா கட்டிக் கொடுத்தாப்புறம்தான் மங்கலத்து ஜமீன் வீடே களை கட்ட ஆரம்பிச்சுச்சாம்...

ஆயா ஒம்பேரு சிவபாக்கியம்தானே...ஏன் செவ்வாக்கியம்னு கூப்புடுறாங்கன்னு வீட்டு வேலை செய்யுற மண்டைப் பய கேட்ட உடனே கோரணங்கெட்ட கேள்வி ஒனக்கெதுக்குடான்னு கத்திக்கிட்டே நீராகரத் தண்ணிக் குடிச்சுக்கிட்டு இருந்த பித்தளைச் செம்ப ஆயா தூக்கி வீசுன வீச்சுல, மண்டையனோட தலை வீங்கியே போச்சாம். ஒத்தப் புள்ளைய பெத்தாலும் பெத்தீக நல்ல வழக்கஞ்சொல்லி வளத்தீகளா.... போனா போன இடம் வந்தா வந்த இடம், அறுவது ஏக்கரா நிலத்தையும் இந்த வீடுவாசலையும் மாடு கண்ணிகளையும் கட்டிக்கிட்டு என்னால அழ முடியலயப்பேன்னு ஆயாவோட மாமனார்கிட்ட அப்போ,அப்போ மூக்க சிந்துறதும் உண்டு. உழுகறதுல இருந்து, விதைக்கிறது, தண்ணி பாய்ச்சுறது, உரம் வாங்குறது, ஏர்க்கு வாங்குன கலப்பைய சரியா இருக்கானு பாக்குறதுல ஆரம்பிச்சு மாடு, ஆடு, கோழின்னு எது எதுக்கு என்ன வேணும்னு பாத்து பாத்து ஆளுகள விரட்டிக்கிட்டே இருக்குமாம் ஆயா...

வயக்காடுதேன் வாழ்க்கை, புள்ளக்குட்டியதேன் பொழுது போக்கு, பொழுதடைஞ்ச உடனேயே வெளக்க ஊதிப்புட்டு படுக்குற பொழப்புள பெத்துப் பொட்டது பத்துப் புள்ளைக, வந்தது, போனது எல்லாம் போக பொழச்சுக் கிடக்குறது ஏழு, ஏழுல நாலு ஆணு, மூணு பொண்ணு...ஆயா குடும்பக் கதையைச் சொல்ல ஆரம்பிக்கும் போதே அள்ளி முடிந்திருக்கும் குட்டைத் தலைமுடியை அவிழ்த்து உதறியபடியே பேச ஆரம்பிப்பாள். ஏட்டி.... சேவாத்தா மகளே.... வந்து கொஞ்சந் தலை பாருடி என்று ஆயாவின் சத்தம் கொல்லைக் கடவுல நிற்கும் சேவத்தா மகளுக்கு கேட்ட மறு நொடி தாவணியோடு பாவடையையும் அள்ளிச் சொருகியபடி ஓடி வருவாள்...

சாங்காலாம் ஆறு மணிக்கு எல்லாம் ஆயாவோட வீடு ஏகக்களேபரமாயிருக்கும். வயகாட்டுக்குப் போன மாடுகளைப் பிடிச்சுக் கட்றதுக்கும் அதுகளுக்கு தண்ணிக்காட்டுறதுக்கும் ஒரு பத்து பேரு, வீட்டுக்குள்ள எண்ணை ஊத்தி வெளக்கேத்தி வக்க மூணு பேரு, வீடு கூட்ட சாமாஞ்சட்டுகள ஒதுக்கி வைக்க நாலுபேரு, வைச்ச சோத்த ஆளுவீட்டுல கொண்டு வந்து வச்சு பந்தி வைக்க நாலு பேரு, இருபது முப்பது கோழிகளைப் பிடிச்சு சரிபாத்து அடைக்க மூணு பேருன்னு சொல்லிட்டு ஆடுமாடுகளோட சத்தமும், கோழிகளோட சத்தமும், வீட்டு ஆளுகளோட பேச்சும்னு ஒரே சலசலப்ப இருக்கும் அந்த வீடு. ஆயாதான் எல்லாத்துக்கும் ஆளுமை. அவளக் கேக்காம ஒரு சொம்புத்தண்ணிய யாரும் சட்டியில இருந்து எடுத்துக் குடிச்சுற முடியாது.

ஆத்தி கை காலு ரெண்டும் கடுக்குது புள்ள கொஞ்சம் அமுக்கிவிடுன்னு ஆயா முத்தத்து ஓரமா கைய மடிச்சுத் தலைக்கி வச்சுக்கிட்டு சாஞ்சு படுக்கும் போதுதான் அன்னைய பொழுதே செவபாக்கியம் படுத்துட்டா நானும் செத்தவடம் படுத்து எந்திருச்சு வரேன்னு சொல்லிட்டுப் போகும்.

முழுப்பரீட்சை லீவுக்கு நான் போகும் போதுதான் எனக்கு ஆயாவ பத்தின கதைகள எல்லாம் ஆயாவே சொல்லும். பிள்ளைங்களுக்கு எல்லாம் கல்யாணம் பண்ணின அப்புறம் ஆயாவோட ஆளுமையை காலம் கொஞ்சம் கொஞ்சமா பிடிங்கிக்கிட்ட 1980கள்ல விவசாயம் பொய்த்துப் போக ஆரம்பித்திருந்தது. மூன்று மகன்களும் வேலை நிமித்தமா வெளியூர்களுக்குப் போய்விட இரண்டாவது மகனும் அவரோட ரெண்டு பிள்ளைங்களும்னு இருந்த அந்த வீட்டுக்கு ஆயாவோட மக வைத்துப் பிள்ளைங்க நாங்க போகும்போதுதான் கொஞ்சமாச்சும் உசுருவரும். அவ்ளோ பெரிய வீட்ல ஆயா அதிகாரம் பண்ணித் திரிஞ்ச காலம் எல்லாம் வானம் பாத்த பூமியில பொய்ச்சுப் போற மழை மாதிரி காணமலேயே போய்டுச்சு.....

'ஏப்பு...., களப்புக் கடைக்காரரே என் ரெண்டாவது மகளோட மயன்....புரோட்டான்னா நல்லாச்சாப்புடுவேன்... அவனுக்கு பொரட்டா வையுங்க....' என்னை டேபிளில் உக்கார வைத்துச் சாப்பிடச் சொல்லி விட்டு அந்த சிறிய டீக்கடையின் ஓரத்தில் கழுத்தைச் சுற்றி கண்டாங்கிச் சேலையை சுற்றிக் கொண்டு ஒரமாய் நின்று ஆயா வேடிக்கைப் பார்ப்பாள்.....! ஏன் ஆயா காதுல பெரிய தண்டட்டிப் போட்டுருப்பியாமே...அம்மா சொன்னிச்சு....எங்காயா அது...? ஆயாவின் மடியில் தலை வைத்துக் கொண்டு கேட்பேன். ஒங்கய்யா செத்த பொறவு எல்லாத்தையும் கழட்டி எறிஞ்சு புட்டேன் அப்பு...! ஒங்கய்யா ஒரு வெவரங்கெட்ட மனுசன் தெரியுமா...

அயிரமீனு கொளம்பு வச்சு நல்லா திம்பானே மனுசன்னு நானே சோத்தப் போட்டு கொளம்ப ஊத்தி வச்சு நல்லா திங்கட்டும்ன்னு பாத்துக்கிட்டே இருப்பேன். அந்த கூறுகெட்ட மனுசன் மூணு தட்டுச் சோற தின்னுப்புட்டு நாலாவது தட்டுக்கும் மறுக்கா மீங்கொளம்பத்தேன் கேக்கும்.... நாலாவது தட்டுச் சோத்த உருட்டி வாயில போட்டுக்கிட்டு...ஏன்டி கிறுக்கு முண்ட மீங்கொளம்புள உப்பே இல்லையடி என்னத்த சமச்சுக் கிழிச்சன்னு கேக்கும்...

அட மொட்டையா போறவனே.. மூணு தட்டுச் சோறையும் ஒண்ணுஞ் சொல்லாம தின்னுப்புட்டு நாலாவது தட்டுச் சோத்துக்கு உப்புப் போடச் சொல்றியே நீ எல்லாம் மனுசந்தானா..ன்னு கேப்பேன்.... ஆயா அய்யாவின் காலத்திற்குள் சென்று கதை சொல்லுவாள். நிறைய பேரப்பிள்ளைகள் இருந்தாலும் ஆயாவிடம் கதை கேட்டு ஆயாவோட எல்லாம் புலம்பல்களையும் விவரமா கேட்டுத் தெரிஞ்சுக்கறதால எம்மேலதான் ஆயாவுக்குப் ப்ரியம் ஜாஸ்தின்னு எனக்குப் பின்னாலதான் தெரிஞ்சுச்சு...! ஆயாவோட அரை வீட்டுக்குள்ள என்னை மட்டும் தனியா கூப்ட்டு 'ஏய்யா....புள்ளக்குட்டிய பாத்தா அம்புட்டுக்கும் கொடுக்க முடியாது...இங்கனதானா தின்னுட்டு தொடச்சிட்டு ஓடுன்னு மடியில இருந்து என்னத்தையாச்சும் எடுத்துக் கொடுக்கும். ஆயாவோட அரைவீட்டுக்குள்ள ஒரு வாசம் வீசும் அதே வாசம் ஆயா மேலயும் வீசும். லீவுக்குப் போறப்ப எல்லாம் ராத்திரிக்கு ஆயாவ கட்டிப் பிடிச்சுக்கிட்டு ஆயாவோட கடந்த கால அதிகார போக வாழ்க்கைய கேட்டுக்கிட்டேதான் நான் தூங்குவேன்.

கட்டி ஆண்டு அதிகாரம் செஞ்சு வாழ்ந்த அதே வீட்டுக்குள்ள வீட்டுக்கு கட்டிக் கூட்டியாந்த மருமக கிட்ட சோறு வாங்கி திங்க காத்துக் கிடக்குற வாழ்க்கை ஆயாவுக்குப் பிடிக்கல. அதுவும் போக மறுமகள்கள் ஒரு போதும் மகள்களாக நடந்து கொள்வதில்லை, மாமியார்களும் மறுமகள்களை மகள்களாக நடத்துவதும் கிடையாது. இதில் ஒன்றும் தவறு இல்லை. அதுதான் நியதி. மறுமகள்களை மகள்கள் போல பார்த்துக் கொள்கிறேன் என்று வேண்டுமானால் பொதுவில் சொல்லிக் கொள்ளலாம் ஆனால் இன்னொரு வீட்டுப் பெண் இன்னொரு வீட்டுப் பெண்தான்.

சோத்துக்கு காக்க வைக்கிறாய்யா...ன்னு ஆயா சொல்லிக் கொண்டு கண் ஆப்பரேசன் பண்ணின கண்ணோட கண் கலங்கினப்ப.. நீ இங்கதானா இரேன் ஆயான்னு எங்க வீட்டில் இருக்க சொன்னேன். அட போப்பு சம்பந்தப்புறத்துல எல்லாம் ஒரேடியா தங்கக் கூடாது. அப்டி இருக்கறது மருவாதை இல்லை...

சொல்லிக் கொண்டே ஊர்ச்சந்தையில் வாங்கி வந்த மஞ்சள் கொய்யாப்பழைத்தைக் கொடுப்பாள். மகள்கள் வீடு, மகள்கள் வீடு என்று காளையார்கோயில், தஞ்சாவூர் சென்னை என்று வலம் வந்து கொண்டிருந்த ஆயா அவ்வப்போது மகன்களின் வீடு, பிறகு யாரும் வேண்டாம் என்று சொந்த வீட்டில் தனியாய் நானே கஞ்சி காய்ச்சி குடிக்கிறேன் என்று முடங்கியும் கொண்டாள்.

ஆயா படுத்த படுக்கையா ஆயிராச்சுமுடா.... அடேய் தம்பி.. உடனே பொறப்புட்டு ஊருக்கு வந்திருடான்னு அம்மா சொன்னப்ப நான் சென்னையில வேலை பார்க்க ஆரம்பிச்சு இருந்தேன். அம்மாவோட கடைசி தங்கச்சி வீட்ல ஆயாவ வச்சிப் பாத்துக்கறதாவும்....அதுக்காக ஆயா பேர்ல இருந்த அஞ்சு ஏக்கர நிலத்தை சின்னம்மாவுக்கு எழுதி வைக்கிறதாவும் மாமாக்கள், அத்தைகள், அம்மா, பெரியம்மா, பெரியப்பா, சித்தப்பா, அப்பா எல்லோர் முன்னாலும் ஒத்துக் கொள்ளப்பட்டதாம். சின்னம்மா வீட்ல ஆயா இருக்கு நாங்க எல்லாம் அங்கதான் இருக்கோம் வந்துருன்னு அம்மா சொன்ன போது சென்னையிலிருந்து காளையார்கோயிலுக்கு வண்டி ஏறிக் கொண்டிருந்தேன் நான்.

காலை ஏழு மணி காப்பியை எல்லோரும் வாசலிலும் திண்ணையிலும் பேசிக் கொண்டே குடித்துக் கொண்டிருந்த பொழுது சின்னம்மா வீட்டை நான் அடைந்திருந்தேன். திண்ணைய்ல் பேக்கைப் போட்டு விட்டு எங்கம்மா ஆயா...? என்று கேட்டேன்....

இங்க வந்து பாருடா ஆயாள.... அம்மா, பெரியம்மா, சின்னம்மா மூன்று பேரும் என்னைக் கட்டியணைத்தபடி கொல்லைக்கு கூட்டிச் சென்றார்கள். சின்னம்மா வீட்டின் கொல்லையில் ஒரு திண்டு மாதிரி சிமிண்டால் கட்டப்பட்டிருக்கும் இடத்தில் ஒரு சிறு வாரமிறக்கி மேலே கீத்துப் போட்டிருந்தார்கள். அந்த திண்டில் மேலே சுற்றப்பட்டிருந்த கண்டாங்கிச் சேலையோடு படுத்திருந்த ஆயாவைப் பார்த்து திகைத்துப் போனேன்.

' ஏய்... முருகாயி...சோறு கொண்டு போற நேரமாச்சுல்ல? இன்னும் என்னடி வேலை பாத்துக்கிட்டு இருக்க செறுக்கி மவளே..., மக்குப் பய உரம் வாங்கப் போனானே இம்புட்டு நேரமாச்சு இன்னமும் என்ன செய்யிறான் தெரியலயே..... எலே.... மண்ட வெளங்காத பயலே ஓடிப்போய் என்னன்டு பாத்துட்டு வாடா, ....ஒரு வா கஞ்சி குடிக்க மனுசங்களுக்கே நேரமில்ல ஒனக்கு சோறு வேணுமாக்கும்...ஏன்டி மணிக்கு சோறு வச்சு பத்தி விடுடி....வால ஆட்டிக்கிட்டு என்னமோ எங் காலையே சுத்தி சுத்தி வருது....

ஏட்டி சந்தைக்கா போற மணிக்கு நாலஞ்சு கலர்ல ரிப்பனு வாங்கியாடியோய்....

எங்கடா போனீக ஒருத்தரையும் காணோடும்... எலேய்.....

நாம் பெத்த மக்கா....ஒருத்தரையும் காணலையே...." திடீரென ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள் ஆயா.

ஆயாவுக்கு புத்தி பேதலித்து இருந்தது. சமகாலம் எதுவும் அவளுக்குத் தெரியவில்லை. அத்தாரிட்டியாய் வாழ்ந்த காலத்தின் அழுத்தமான பதிவுகளுக்குள் இருந்து மீள முடியவில்லை அவளால்.....ஏம்மா.. இப்டி பொலம்புற....அப்பு வந்திருக்கான் பாரும்மா....சின்னமா அழுது கொண்டே என்னை ஆயாவின் பக்கத்தில் போய் உட்காரச் சொன்னாள்...

குப்புறப்படுத்கிருந்தா ஆயாவிற்கு மொட்டை அடித்திருந்தார்கள். ஆயா.....எப்டிய்யா இருக்க... ஆயாவை இழுத்து என் நெஞ்சோடு அணைத்துக் கொண்டேன்......கலங்கிய அவளின் விழிகளுக்குள் வாழ்ந்து முடித்த வாழ்க்கையின் மிச்சம் கலக்கமாய் தேம்பிக் கொண்டிருந்தது......ஆயா... என்ன பெத்த ஆயா... என்னாச்சு உனக்கு....தேம்பித் தேம்பி அழுதேன்....

ஏப்பு.... எப்ப வந்த...? என்னடி சும்மா நிக்குறீய புள்ளைக்கு சோத்தப் போடுங்க....' நினைவு தப்பிப் போயிருந்தாலும் வீட்டு வந்தவர்களுக்கெல்லாம் சோறிட்ட அந்த மகராசியின் விருந்தோம்பல் பண்பு மறைந்து போயிருக்கவில்லை. என்னையே பாத்துகிட்டு இருந்தாள் ஆயா... கொஞ்ச நேரம்....என்ன நினைத்தாளோ... என் மணிக்கட்டில் தலை வைத்து ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்தாள்.

வீட்டின் கொல்லைப்புறம் அவளை கிடத்தியதற்கு காரணத்தை சொந்தங்கள் என்னிடம் கூறின. மாலைப் பொழுதுகளில் அவள் நினைவுகளில் நிறைய பேர்கள் வந்து போவார்கள் போல நிறைய பேசுவாள், விடியற்காலையில் மறுபடியும் அதே அதட்டல்கள், வேலை ஏவுதல்கள் என்று அது தொடரும்... உச்சி வெயிலில் சுருட்டிக் கொண்டு கண் மூடி தூங்குவது போல கிடப்பாள் ஆனால் வாய் ஏதேதோ மெதுவாய் பேசிக் கொண்டே இருக்கும்....

மறுபடி வேலைக்காக சென்னை வந்து ஒரு மாதத்தில்....

ஆயா இறந்து போனதாய் டெலிபோன் வந்த போது ட்ரெயினிங் ஒன்றுக்காக மும்பையிலிருந்தேன் நான். விடுமுறை எடுக்க முடியாத சூழலும் போய்ச் சேர மூன்று நாள் ஆகும் என்பதாலும் என்னால் ஆயாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை...

காலங்கள் ஓடிவிட்டன...

இப்போதும் மாமா வீட்டிற்கு படியேறும் போதெல்லாம்...யாரோ வாராக... ஓடிப்போய் கதவத் தொறங்கடா...... என்ற அவளின் சப்தம் எனக்குக் இன்னமும் கேட்டுக் கொண்டுதானிருக்கிறது....


பொக்கை வாய் கிழவியாய்,
அனுபவத்துக்கத்தை சுகமாய்,
சிரிப்பாய் காட்டியிருப்பாள்,
அமுதோடு, வாழ்வும் ஊட்டி வளர்ப்பாள்!

இறக்கையில் கைகூப்பி
வணக்கம் கூறிச்சென்றவள்!
இறப்பென்பதை எனக்கு
கண்ணில் காட்டியவள்!!

கூடி நின்றவர்
வழி விட்டு வழி அனுப்ப
என்னை விட்டுச்சென்றாள்!
என்னுடன் அவள் பாசம் மட்டும்
விட்டுச்சென்றாள்!

எல்லாருக்கும் ஒர் பாட்டி
இருந்திடல் வேண்டும்!
கொஞ்சலும், வருடலும்,
நேசமும், மன்னிப்பும்
பழகிட என் பாட்டி போல்
ஒருவர் நிச்சயம் வேண்டும்!

Viewing all articles
Browse latest Browse all 60709

Trending Articles